கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!!
பாஜக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவர் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது, ‘கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் குறிப்பாக தமிழ்நாடு பயங்கரமாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. அப்போது வருகை தராத மோடி, தற்போது தமிழ்நாட்டுக்கு 5வது முறையாக வரவுள்ளார்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், ‘வெள்ள நிவாரண தொகையாக ரூ.37,000 கோடி கேட்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சல்லி பைசா கூட கொடுக்கவில்லை’ என்று கூறிய அவர், “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் விதமான குடியுரிமை திருத்த சட்டத்தினை அமல்படுத்த பிரதமர் மோடி எண்ணுகிறார். அதனை கண்டித்து கன்னியாகுமரி அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திற்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.