மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்

Photo of author

By Ammasi Manickam

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சரான பொன்முடி சமீபத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து அவர் ஏற்கனவே வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என திமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் இன்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் தனது மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்படுகிறார். அதேபோல மாவட்ட அவைத் தலைவராக ம.ஜெயச்சந்திரனும், துணைச் செயலாளராக டி.என்.முருகனும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவித்தார்.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு துரைமுருகன் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்முடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் புகழேந்தி கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவரான புகழேந்தி, 1973ஆம் ஆண்டிலிருந்து திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பொதுக் குழு உறுப்பினர், விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர், அவைத் தலைவர் என கட்சியில் படிப்படியாக உயர்ந்து பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.