மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு!!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ப்ரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு வழங்குவதற்காக ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதி மடக்கும் வகையிலான கட்டில்களை கொண்டு வந்ததாக தெரிகிறது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி கட்டில்களை எடுத்துச் சென்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கண்ணீர் மல்க பேசினார்.இதற்கிடையே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் சம்மேளனத் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்த பி.டி.உஷா, வீரர்களின் போராட்டம் நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் கண்டனம் எழுந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை பி.டி.உஷா சந்தித்துப் பேசினார்.