கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

0
119
#image_title

கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை தகர்ப்பு!! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தழுதாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன், பன்னீர் ஆகியோர் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடலோர ஒழுங்கு மண்டலத்தின் கீழ் வரும் முதலியார்குப்பத்தில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலா தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அனுமதியில்லாத பகுதியில், அத்திட்டங்களை செயல்படுத்த கடலோர ஒழுங்குமுறை மண்டல அமைப்பிடம் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் எந்த அனுமதியும் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இங்கு கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவதால், அந்த கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில், இந்த கட்டுமானங்கள் உரிய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை அகற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவரை அகற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வெடுப்பதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தரைதளத்துடன் கூடிய ஓலைக்குடிசைகள் இருக்கலாம் என்றும், அதேவேளையில் நிரந்தர கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேற்கொண்டு எந்த கட்டுமானம் ஏற்படுத்த வேண்டும் என்றாலும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்பே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.