பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரம்..நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!!
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். பலமான எதிரணிகள் என்பதால் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ராதிகா சரத்குமார் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது கணவருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருவரும் வித்தியாசமாக ஜீப்பிற்கு பதிலாக பைக்கில் வந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். சரத்குமார் பைக் ஓட்ட ராதிகா பின்னால் அமர்ந்தபடி தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டிருந்தார்.
தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தனது மனைவியை பின்னால் அமரவைத்து பைக் ஓட்டி சென்ற சரத்குமார் ஹெல்மெட் அணியவில்லை. அதுமட்டுமின்றி அவர்கள் சென்ற பைக்கில் நம்பர் பிளேட் கூட இல்லை. ஒரு வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சாலை விதிகளின்படி இருசக்கர வாகனம் ஓட்டும் நபர் கட்டாயமாக ஹெல்மெட் அதாவது தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆனால் சரத்குமார் அதை கடைபிடிக்கவில்லை. அதேபோல் அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டும் இல்லாமல் இருப்பதால், சாலை விதிகளை மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.