அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் சொந்த கட்சியினர் கொடுத்த ஷாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு நடத்தியது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனைக்கு இடையில் இவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. அப்போது அவருக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மொத்தம் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. அதே போல சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது அவர் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக 13 இடங்களில் ரெய்டு நடக்கிறது.
இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையில் வேலுமணி வீட்டில் எக்கச்சக்கமாக அதிமுக நிர்வாகிகள் குவிந்தனர். அவருக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 6 எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் குவிந்தனர். அதோடு அதிமுக மகளிரணி நிர்வாகிகள் பலர் வேலுமணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர்.
முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த வேலுமணி வீடு முன் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் போலீசார் இவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டனர். அதே போல மகளிர் அணியினரை கட்டுப்படுத்த பெண் போலீசாரும் அதிக அளவில் அங்கே குவிந்தனர்.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த அங்கே சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூட எஸ்.பி வேலுமணியை நேரில் சந்திக்க முயற்சி செய்தார்.
அதோடு அவரை சந்திக்க போகும் வழியில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் கோபமாக வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி வேலுமணி வீட்டில் 3 வது முறையாக ரெய்டு நடந்தும் கூட கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அவருக்கான ஆதரவும், செல்வாக்கும் அதே அளவில் உள்ளது.
ஆனால் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று ரெய்டு நடந்த போது அப்போது இருந்த அளவில் கூட்டம் இல்லை. அவரை பார்க்க பெரிதாக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் யாரும் வரவில்லை. வேலுமணி வீட்டில் இருந்த அளவிற்கு விஜயபாஸ்கர் வீட்டில் கூட்டமோ, அவரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டமோ எதுவும் இல்லை.
இதை உணர்ந்து கொண்டு காவல்துறையினரும் அங்கு குறைவாகவே நிறுத்தப்பட்டு இருந்தனர். எஸ்.பி வேலுமணிக்கு கொடுக்கப்பட்ட அளவிற்கு விஜயபாஸ்கருக்கு இன்று பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதுதான் அதிமுகவில் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. எஸ்.பி வேலுமணிக்கு கட்சி முழுவதும் செல்கிறது ஆனால் இவருக்கு யாரும் வரவில்லை. இது என்ன நியாயம் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். மேலும் இந்த ரெய்டை எதிர்பார்க்காத விஜயபாஸ்கர் தரப்பு கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி செக் வைப்பதால் விஜயபாஸ்கர் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது.
இது மட்டுமில்லாமல் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மரண விசாரணையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சி விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுவும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ரெய்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த போது விஜயபாஸ்கர் தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். மேலும் இவர்தான் ஜெயலலிதா சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையில் அடிக்கடி இருந்தார்.
இதனால் அவர் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இப்படி வரிசையாக குட்கா வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மற்றும் ஜெயலலிதா மரண விசாரணை என்று ஆளும் தரப்பு 3 விதமான விசாரணைகளை விஜயபாஸ்கர் மீது தொடுத்துள்ளது. இது அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பதற்றத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அதே நேரத்தில் சொந்த கட்சியினர் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.