செந்தில் பாலாஜி மீதான தொடர்ச்சியான விசாரணைகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், நீண்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியேறிய இரண்டே நாட்களில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
செந்தில் பாலாஜியின் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், நேற்று அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், ஒப்பந்தத்தாரர் எம்சிஎஸ் சங்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. அதேபோல், செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றது. இந்த சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் தொடர்ச்சியான ரெய்டுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் மறுப்பு
இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் சென்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றதால், மத்திய அரசு தங்களின் ஏஜெண்ட் மூலமாக சோதனைகளை நடத்துகிறது. மேலும், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, நிதி பகிர்வு விவகாரம் ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை மாற்ற மத்திய அரசு இந்த ரெய்டுகளை மேற்கொள்கிறது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு, அவர்களே காரணத்தை கூறுவார்கள்,” என்று தெரிவித்தார்.
பாஜகவின் கையெழுத்து இயக்கத்தையும் விமர்சித்த உதயநிதி
தொடர்ந்து, பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து இயக்கம் குறித்து கேட்ட போது, உதயநிதி ஸ்டாலின், “பள்ளிக் குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக் கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு கோடி கையெழுத்து பெற்றோம். ஆனால், அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டுதான் கையெழுத்து பெற்றோம். ஏற்கனவே, மிஸ்டு கால் மூலம் ஒரு கோடி பேரை அந்த கட்சியில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே இப்போது கையெழுத்து பெறுவதையும் பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.