லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு தங்கள் பணிநேரத்தின் பொழுது உணவு அருந்தவோ அல்லது கழிவறை இடைவெளியோ வழங்குவதற்கான சட்டம் ஏற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது.
இந்தியன் ரயில்வே துறைக்கு ரயில்வே ஓட்டுநர்கள் வைத்த நீண்ட கால கோரிக்கையாக உணவு இடைவெளி மற்றும் சிறுநீர் இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இதற்காக சட்டம் இயற்றும் சாத்தியமில்லை என்றும் பணிநேரத்தின் பொழுது இது போன்ற இடைவெளிகள் வழங்கப்பட முடியாது என்றும் ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது. விபத்துக்கள் நிகழாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் ஐந்து நிர்வாக இயக்குநர்கள், ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) ஐந்து நிர்வாகக் குழுவினர் சேர்ந்து ரயில்வே துறையின் மேம்பாடு குறித்தும் ரயில்வே பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மண்டல ரயில்வே களின் மேலாளருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பரிந்துரைகளின் பொழுது ரயில்வே ஓட்டுநர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கக்கூடிய இடைவெளி காலமானது ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என பரிந்துரையின் பொழுதே தெரிவிக்கப்பட்டிருப்பது லோகோ பைலட்டுகளை வருத்தம் அடைய செய்துள்ளது.