ஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்!
பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி 11 வாரங்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் அப்படி நடந்ததில்லை.
இந்நிலையில் இந்திய சார்பாக இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆர் ஆர் ஆர் அல்லது காஷ்மீர் பைல்ஸ் ஆகிய திரைப்படத்தில் ஏதாவது ஒன்று ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி “செல்லோ ஷோ” என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனம் தளராத இயக்குனர் ராஜமௌலி ‘பரிந்துரை’ பிரிவில் RRR படத்தை 15 பிரிவுகளில் ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளாராம். அனுப்பியதோடு மட்டும் இல்லாமல் படத்தை ப்ரமோட் செய்ய இப்போது அமெரிக்காவில் முகாமிட்டு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தன்னுடைய படங்கள் அனைத்தையும் திரையிட்டு அமெரிக்க ரசிகர்களைக் கவர முயற்சி செய்துவருகிறார். இதற்காக அவர் சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்தை ஜாப்பனீஸ் மொழியில் டப் செய்து ஜப்பானில் நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்காக இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஜப்பானுக்கு ப்ரமோஷனுக்காக சென்றுள்ளனர்.