ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி!
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் 3 கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பெங்களூர் சென்ற தனிப்படையினர் அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதிய காவல்துறையினர் கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 2 வாரங்களாக காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை தேடி வரும் நிலையில் அவருடைய உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படையினர் தற்போது டெல்லி விரைந்துள்ளனர்.