“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

Photo of author

By Vijay

“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!

Vijay

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கூட்டத்தில் நடந்த சம்பவம்

சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் மேடையில் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு நிர்வாகிகள் பொன்னாடை அணிவிக்கச் சென்றனர். இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் முதலில் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்தார். அதன் பிறகு, அருகே இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்க முயன்றபோது, திடீரென ராஜேந்திர பாலாஜி எழுந்து, “யார் மாவட்டச் செயலாளர் என தெரியாதா?” எனக் கோபத்துடன் கேட்டு, நந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

மேடையில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து, மற்ற நிர்வாகிகள் நந்தகுமாரை அழைத்துச் சென்றனர். அதே சமயம், மாஃபா பாண்டியராஜன் அமைதியாக அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு நிகழ்வை விட்டு வெளியேறினார்.

மாஃபா பாண்டியராஜனின் விமர்சனம்

இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை சென்ற மாஃபா பாண்டியராஜன், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி “குறுநில மன்னர்” போல செயல்படுகிறார் என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜேந்திர பாலாஜி மிக கடுமையாக பதிலளித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜியின் ஆவேச பேச்சு

மாஃபா பாண்டியராஜன் குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அமைதியாக இருக்க நான் பைத்தியக்காரனோ, கிறுக்கனோ இல்லை. தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். அதிமுகவுக்கு வஞ்சகம் செய்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால் உனக்கு என்ன வரலாறு இருக்கிறது?” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

“அதிமுகவில் நான் ஒரு உறுதியான தலைவராக இருக்கிறேன். எனது பின்னால் உள்ள தொண்டர்கள் வாள் ஏந்திய வீரர்கள். என்னைப் பற்றி பேச விரும்பினால், நேருக்கு நேர், விருதுநகரில் வந்து பேச வேண்டும். சென்னையில் இருந்து விமர்சித்து என்ன சாதிக்க முடியும்? வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும், நான் எப்போதும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன்,” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“கட்சியின் உள்ளும், வெளியும் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஆனால், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சியின் நலனுக்காக எந்த நிலைக்கும் செல்ல தயங்க மாட்டேன். எடப்பாடிக்கு எதிராக யாரேனும் வருவதாக இருந்தால், அவர்களை எதிர்கொள்வதற்காக அரிவாளும், துப்பாக்கியும் ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா?” என்று சவால் விட்டார்.

“மாவட்டச் செயலாளராக நான் இருக்கும் போது, மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க அனுமதிக்க முடியாது. பல கட்சிகளில் சென்று திரும்பி வந்த ஒருவருக்கு மரியாதை அளிக்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த நிர்வாகியின் செயலுக்கு தண்டனை கொடுத்தேன்” என கூறினார்.

மேலும், மாஃபா பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்த அவர், எதிராக ஏதேனும் வழக்கு வந்தால், உடனே வேறு கட்சிக்கு சென்றுவிடுவாய். ஆனால், நான் அப்படி அல்ல. சட்ட முறைப்படி எதிர்கொள்ள தயங்க மாட்டேன். நான் எந்தவொரு விசாரணை அமைப்பிற்கும் பயப்பட மாட்டேன். பாஜக, தேமுதிக, அதிமுக, ஓபிஎஸ் அணி, மீண்டும் அதிமுக என தொடர்ந்து கட்சி மாறி வந்தவர் மாஃபா பாண்டியராஜன் எனக் கூறினார்.