தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Photo of author

By Anand

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார்.

இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்ற மற்றும் நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் அ.தி.மு.க. சார்பில் 4 உறுப்பினர்களும், திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தலா 1 உறுப்பினரும் அடங்குவர்.

அதிமுக உறுப்பினர்கள்:

1. விஜிலா சத்யானந்த்

2. மேட்டுப்பாளையம் செல்வராஜ்

3. முத்துகருப்பன்

4. சசிகலா புஷ்பா

திமுக உறுப்பினர்:

5. திருச்சி சிவா (தி.மு.க.)

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்:

 6. டி.கே.ரங்கராஜன்

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்த ஆறு  மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் வருகிற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் காலியாகும் இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்ப புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 17 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கும் சேர்த்து இந்த 55 இடங்களுக்கும் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கு மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதலாக வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 16 ஆம் தேதியாகும். இவ்வாறு தமிழகம் சார்பாக 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வெளியாகியுள்ள இந்த தேர்தல் அறிவிப்பில் அதிமுக சார்பாக 3 உறுப்பினர்களும், திமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.