எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

Photo of author

By Sakthi

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் நான்கு மணி நேர விவாதத்திற்குப் பிறகு அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதா சென்ற 2019 ஆம் வருடம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் நான்காவது நாளான நேற்றைய தினம் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தார்கள். இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் மாநிலங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும், கூறினார்கள்.

திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினார், தொடர்ந்து அவர் பேசும்போது இந்திய மாநிலங்களின் ஒன்றியம் நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது கூட்டாட்சி முறையில் செயல்படுகிறது. அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல்முறை, பராமரிப்பு உள்ளிட்டவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசு கொண்டு வந்திருக்கும் பெரும்பாலான மசோதாக்கள் மாநில உரிமைகளை மீறுவதாக இருக்கிறது. இந்த மசோதாவும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் இருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறி பறிக்க இயலாது என்று தெரிவித்தார்.

அதேபோல பாஜக கூட்டணியில் இருக்கின்ற அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ உள்ளிட்டோரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். நான்கு மணி நேர விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் ஆக அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.