இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் உட்பட இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளுக்கான ரூ.1,000 கொரோனா நிவாரண நிதி இன்று வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 02 (இன்று) முதல் வருகின்ற 15 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் ரேசன் கடை ஊழியர்களின் மூலம் அனைத்து அந்தந்த பகுதி வீடுகளுக்கும் சென்று நேற்று டோக்கன் வழங்கியதோடு இன்றும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அந்த டோக்கனில் பொருட்கள் வாங்க வேண்டிய ரேசன் கடை, குடும்ப தலைவரின் பெயர், அட்டை எண், தேதி, நேரம், நாள் மற்றும் டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அவரவர் டோக்கனில் கூறப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் உங்களுக்கான நிவாரண பணம் மற்றும் இலவச பொருட்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
நிவாரண பொருட்களை வழங்கும் ரேசன் கடை ஊழியர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம் மற்றும் கையுறை ஆகிய பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரம் தவறி வரும் நபர்களுக்கு மற்ற நாளில் கிடைக்கும் என்னு கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் நியாய விலைக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.