சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதளத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜு. இவருக்கு 54 வயது. குடும்ப உறுப்பினர்களில் 3 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நான் வேம்படிதளம் என்ற ஊரில் 20 வருடமாக வசித்து வருகிறேன்.என் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 3 பேர் . நான் என் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு 3 வருடங்களுக்கு முன் விண்ணப்பித்தேன். அடுத்து ஒரு மாதம் கழித்து ரேஷன் கடையில் போய் கேட்கும்பொழுது ரேஷன் கார்டு வரவில்லை என அலைக்கழித்தனர். பல முறை இதுபோன்று சொல்லி என்னை அலைக்கழித்து வந்தனர்.
பின் ஆதார் எண்ணுடன் மறுபடியும் விண்ணப்பித்த பொழுதுதான் ஏற்கனவே ரேஷன் கார்டு வந்து விட்டதாகவும், அதை பயன்படுத்தி வருவதாகவும், கடை விவரம் போன்ற அனைத்து விபரங்களையும் அறிய முடிந்தது.
இது குறித்து சேலம் மாவட்ட அலுவலகத்தில் சென்று பார்த்த பொழுது இரண்டு ஆண்டுக்கு முன்னரே ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டதாக ஆவணங்களை காண்பித்தனர். இரு ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய ரேஷன் கார்டுகளில் வரும் பொருட்களையும் நிவாரண நிதியையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் ரேஷன் கடை விற்பனையாளர். மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் தனக்கு வரும் அனைத்து பொருட்களையும் முறைகேடாக பயன்படுத்தி ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து ரேஷன் கார்டை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.