சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை தொடங்கி வைத்து, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை வழங்கினார்.
அதன் பிறகு, விழாவில் துணை முதல்வர் பேசியதாவது :-
மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் துறை என்றால் அது கூட்டுறவுத் துறை தான். தமிழ்நாட்டில் 2 கோடியே 30 லட்சம் குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம்தான் வழங்குகின்றோம். இதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செயல்படும் 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் எனும் மாபெரும் நெட்வொர்க் தான், முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து கூறியவர், அதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளையும் விளக்கினார்.
1965 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்திய உணவு கழகம்.இதன் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் நெல், கோதுமை முதலான பொருள்களை கொள்முதல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்குகள் அமைத்து, இருப்பு வைத்து (stock) தேவைப்படும் நேரங்களில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசே வழங்கியது.
இதன் மூலம் தமிழ் நாட்டிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மிக குறைந்த அளவு கிடைத்தது. அதனால் அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எந்தவித குறையும் இன்றி ரேஷன் பொருட்கள் கிடைத்தன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1000 ரூபாய் பெறுகின்ற இந்த திட்டத்தில், கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக 8 லட்சத்து 29 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல், மகளிர் உரிமைத்தொகையை Recurring Deposit ஆக செலுத்தி, அதன் மூலம் மகளிர் வட்டியைப்பெற்று குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய அளவிலான தொகையாக பெறுவதற்கான ‘தமிழ்மகள்’ எனும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகின்றது. மேலும் சிறுசேமிப்பை ஓர் இயக்கமாகவே கூட்டுறவுத்துறை மாற்றியிருக்கின்றது.
மேலும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் மேன்மைக்காக உழைக்கின்ற கூட்டுறவுத்துறை இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றும் துணை நிற்பார்கள் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.