ஆருத்ரா மோசடி வழக்கில் ஜாமின் மறுப்பு! ஆர் கே சுரேஷ் தவிப்பு
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் ஆர் கே சுரேஷிற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, ஆர் கே சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் ஆர் கே சுரேஷ் தற்போது தன் மனைவி குழந்தைகளுடன் வெளிநாட்டில் உள்ளதால், வழக்கு சம்பந்தமாக நேரில் ஆஜராக இயலாது என்றும், மேலும் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை கூறியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு கூறியிருந்தது, ஆனால் எம்மாதிரியான ஆதாரம் என்று தெளிவாக கூறவில்லை என்பதால் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என ஆர் கே சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எந்த மாதிரி ஆவணங்கள் வேண்டும் என்பது குறித்து புதிதாக இன்னொரு சம்மன் அனுப்ப காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சுரேஷ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காவல் துறை அதிகாரிகள், இந்த சம்மனை ரத்து செய்யாமல் இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல் துறை ஏப்ரல் 28ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததோடு ஆர் கே சுரேஷின் சம்மன் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.