வாடகை வீட்டினை காலி செய்ய மறுப்பு !! மனைவிக்கு மெயில் அனுப்பிவிட்டு உரிமையாளர் தேடிய விபரீத முடிவு !!
வாடகைக்கு விட்ட வீட்டினை வாடகைக்கு குடியிருந்த நபர் காலி செய்து கொடுக்க மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். இந்த சோகமான சம்பவம் பற்றி கூறப்படுவதாவது,
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்பு சாலையில் உள்ள லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 50. இவரது மனைவி நளினா வயது 45. ஹரிஹரன் அங்குள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் கணக்காளராகவும், நளினா மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
ஹரிஹரனுக்கு சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக பணத் தேவைக்கு தனது வீட்டினை அந்த பகுதியில் உள்ள தமிழ்ச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் குடிவந்த ஆரம்பத்தில் இருந்தே ஹரிகரனுக்கும், தமிழ்ச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டினை காலி செய்யும் படி தமிழ்ச் செல்வியை கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டினை காலி செய்ய மறுத்துள்ளார். எனவே ஹரிஹரன் பத்துகாணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அங்கு எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் மாவட்ட ஆட்சியரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியுடன் ஹரிஹரன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று வியாழக்கிழமை இரவு தனது மனைவி நளினாவுக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் மார்த்தாண்டத்தின் ஒரு பிரபல விடுதியில் தற்போது இருப்பதாகவும், மன வருத்தமாக உள்ளதால் தற்கொலை செய்யப் போவதாகவும் அனுப்பி உள்ளார். இதனால் அவரது மனைவி பயந்து உறவினர்களை அனுப்பி பார்க்க அங்கு ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
உடனே இந்த சம்பவம் குறித்து நளினா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.