ஜூலை 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் கட்டுபாடுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு தமிழகத்தில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய முதல் வகையில் 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் மற்றும் சாலையோர உணவு கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மின் பொருட்கள், கேபிள் கடைகள், புத்தகக் கடைகள், வீட்டு உபயோக கடைகள் , பல்புகள், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைகள் போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வணிக உணவு பார்சல் சேவைக்கும், இதர மின் வணிக நிறுவனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சலூன்கள், அழகு நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் கட்டுப்பாட்டிலுள்ள பூங்காக்கள், அரசு பூங்காக்கள் , விளையாட்டு திடலுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை போன்ற 23 மாவட்டங்களில் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் சாலையோர உணவகங்கள் மற்றும் கடைகளில் பார்சல் சேவைக்கு அனுமதி, பொது போக்குவரத்து மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி, கட்டுமான பணி மேற்கொள்ள 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதி ,பாத்திரக் கடைகள், அழகுசாதன பொருட்கள், பேன்ஸி, ஸ்டுடியோ, சலவைத் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. அனைத்து துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். வணிக வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி, திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக்கு அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.