தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊரடங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படும் நேரமானது இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதனால் கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை முடிவடைவது தொடர்ந்து, புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு முதல்வர் நீட்டிப்பு செய்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து இடங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும். மேலும், இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12.7.2021 முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெப்பநிலை பரிசோதனைக் கருவி பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். குளிர்சாதன வசதியை செய்யக்கூடாது என கூறியுள்ளார்.