குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அதை போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வருவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினம் நெருங்குவதையொட்டி அதை கொண்டாட டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதேப்போல் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறும். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நடைபெற உள்ள முதல் குடியரசு தின விழா இதுவாகும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வழக்கமாக குடியரசு தின விழாவில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, வழக்கமாக மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு 35 நிமிடத்தில் விழாவை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.