திருவாரூர் மாவட்டத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு! இருவர் கைது

Photo of author

By Parthipan K

திருவாரூர் மாவட்டத்தில் ஐம்பொன் சிலைகள் மீட்பு! இருவர் கைது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு, வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை மகன் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர்கள் கண்ணன் வயது 55. இவரது மகன் சூர்யாப்பிரகாஷ் வயது 23. இவர்களது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு நாணயங்கள் ஆகியவை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்றப் புலானாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை கண்ணன் வீட்டில் இருந்து சிலையை வாங்க வருவது போல் நடித்து வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தன்வந்திரி ஐம்பொன் சிலை 1,  ¼  அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முக்கால் கிலோ எடையுள்ள இரண்டு செப்பு நாணயங்கள் ஒரு காலச் சக்கரம் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த நபருடன் நடத்தப்பட்ட விசாரணையில் மன்னார்குடி திருமைக்கோட்டையில் அகஸ்தியர் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் அந்த கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கி விற்பதற்காகவே வீட்டில் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது.

வீட்டில் பதுக்கி வைத்துள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.