மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு.
பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின் இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? – நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்தகள் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
மதுரையைச் சேர்ந்த கனகேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. சித்திரை திருவிழாவின் போது பக்தர்களுக்காக பலவகையான சாதங்கள் மற்றும் அன்னதானம் செய்வோர் மற்றும் பிரசாத உபயதாரர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. இச்சட்டத்தின் கீழ் தினசரி ரூ 3 ஆயிரத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தான் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். எனவே, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் அமர்வு, “பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின். இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? 5 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் இதனை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்துங்கள் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.