மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கான கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
அதேபோல், ஓய்வு பெறும் வயதில் மாற்றங்களை செய்யுமாறு அரசு ஊழியர் சங்கம் அல்லது அமைப்புகள் ஏதேனும் கோரிக்கை வைத்ததா..? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பில் இருந்து முறையான கோரிக்கை எதுவும் வரவில்லை” என்று தெரிவித்தார். அதேபோல், மத்திய – மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது ஒரே மாதிரியாக இல்லை. இதற்கான காரணம் என்ன..? என கேட்டபோது, “இதுதொடர்பான தரவை தேசிய அளவில் அரசு பராமரிக்கவில்லை. ஏனென்றால், இது மாநிலப் பட்டியலில் வருகிறது” என்று விளக்கம் அளித்தார்.