பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கலைவாணன், சி.வி.எம்.பி.எழிலரசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியானது இன்றியமையாதது என்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் இதுவரை 1,30,000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது இவர்களால் தான் என பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பாராட்டியுள்ளார் அமைச்சர்.
மேலும், 7500 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மேம்படுத்துவது மற்றும் உயர் கல்விகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவை அனைத்தையும் தன்னால் நேரில் சென்று பார்க்க முடியாது என்றும் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது போன்ற பணிகளை நேரில் கண்டு எந்தவித சமரசமும் இல்லாமல் அங்கு நடக்கக்கூடிய நிறை மற்றும் குறைகளை நேரடியாக தன் கவனத்திற்கு கொண்டு வரும் படியும் ஒரு வேளை தன் கவனத்திற்கு கொண்டுவர முடியவில்லை என்றால் அமைச்சர்களுக்கு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கோ கொண்டு செல்லலாம் என தெரிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறையில் வளர்ச்சி தன்னால் மட்டுமே கிடையாது என்றும் அவற்றில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் உழைப்பும் உள்ளது என்றும் அந்த ஒத்துழை ஆனது கிடைத்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.