கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

Photo of author

By Parthipan K

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மெடிக்கல் கடையில் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மந்தைவெளி பகுதியில் பதுங்கியிருப்பதாக இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் தலைமையிலான காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்கள் கூவம் ஆற்றில் குதித்துத் தப்பிக்க முயன்றனர். அதைப்பார்த்த காவல்துறையினரும் கால்வாயில் குதித்து இளைஞர்களை மடக்கினர். பின்னர், பிடிபட்ட இளைஞர்களை போலீஸார் குளிக்க வைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் ராஜேஷ், விஜயகுமார் எனத் தெரியவந்தது. இவர்கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.