மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் வீரகனூர் பகுதியில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை பயங்கரமாக தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.
அந்த சமயம் பார்த்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது அந்த இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே ராஜா அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜாவை மீட்ட பொதுமக்கள் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தனர். அந்த கேமராவில் இரண்டு இளைஞர்கள், ராஜாவை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற காட்சிகள் முழுவதுமாக பதிவாகியிருந்துள்ளது. கிடைக்கப்பெற்ற காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தற்போது அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பொது இடத்தில் ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.