கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார்.
ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பாஜகவுடன் கூட்டணியும் வைத்துவிட்டார். இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. இது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக முடியுமா என்பது தேர்தல் ரிசல்ட்டில்தான் தெரியவரும்.
இந்நிலையில், சமீபகாலமாகவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசை திட்டி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதோடு, சட்டசபையில் பல விஷயங்களையும் பேசி கேள்விகளை எழுப்பி வருகிறார். இது ஸ்டாலினிக்கே தலைவலியாக இருந்து வருகிறது.
இன்று கூட சட்டசபையில் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த அநீதி, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு அமைச்சர் பதவி போனது, உள்ளிட்ட பல விஷயங்களை பற்றியும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. தோல்வியில் சாதனை படைத்து வரும் பழனிச்சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறார்., பழனிச்சாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா?.. அதிமுக ஆட்சியியில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர் ஈபிஎஸ். அமைச்சரவை மாற்றம் குறித்து பேசாமல் இருப்பது பழனிச்சாமிக்கு நல்லது. செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா பற்றி பேச பழனிச்சாமிக்கு அருகட்தை இல்லை’ என பொங்கியிருக்கிறார்.