பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் அவர்களிடம் எதிர்க்கட்சிகள் நெருங்காமல் பாதுகாத்து கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களிடம் ஆளும் கட்சியின் குறைகளை கூறி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுக தொண்டர்கள் ஆதரவை பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வெளிப்படையாகவே கேட்டுள்ளனர்.
அந்தவகையில் பாமக பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் நமக்கு பொது எதிரி திமுக தான் அதனால் தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுக தொண்டர்கள் களத்தில் உள்ள பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது கூட்டத்தில் பெரும்பாலான இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணியிருந்த திமுக தரப்புக்கு இது அதிர்ச்சியை அளித்தது. இதனைத்தொடர்ந்து அதற்கேற்றவாறு திமுக தனது தேர்தல் வியூகத்தை மாற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இதில் அதிமுக தொண்டர்கள் ஆதரவை கேட்ட பாமக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அவர்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது உள்ளிட்டவைகளை வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா படத்தை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதை அதிமுக தலைமையே வரவேற்ற நிலையில் திமுக எதிர்ப்பது அவர்களின் தேர்தல் தோல்வி பயத்தையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
கடந்த சில தினங்களாக அதிமுக வாக்கை மையப்படுத்தி பிரச்சாரம் நடைபெற்று வருவதால் கலக்கமடைந்த திமுகவினர் பாமகவுக்கு எதிராக அதிமுக தலைவர்கள் பேசியது போல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க கூடாது என்று கருத்து தெரிவித்தது போல தகவல் பரவியது.
இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட அதிமுக தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளித்துள்ளனர். தற்போது சி.வி.சண்முகம் டெல்லியில் இருப்பதால் தனது உதவியாளர் மூலமாக இந்த புகாரை கொடுத்துள்ளார். மேலும் அதிமுக தேர்தலை புறக்கணித்தது கட்சியின் நிலைப்பாடு அதேபோல தொண்டர்கள் வாக்களிப்பது குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.