ஊர் கடந்து, நாடு கடந்து, வானத்தில் பறந்து படம் எடுத்த காலம் போய், இப்பொழுது ஒரு நாடு விண்வெளியில் படம் எடுத்து சாதனை படைக்க தயாராகி கொண்டிருக்கிறது.
பொதுவாகவே அயல்நாடுகளில் விண்வெளி தொடர்பான படங்கள் மிக அதிகமாக எடுக்கப்படும். பல கோணங்களில், பல வகையான திரைக்கதையில் விண்வெளி திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழில் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் விண்வெளி தொடர்பாக வெளிவந்த படமே. இடைவேளைக்கு பிறகு 1 மணி நேரத்திற்கும் மேலான காட்சிகள் விண்வெளியில் நடப்பது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கும்.
ஆனால் இது போன்ற திரைப்படங்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படும். இதுவே முதன்முறையாக ஒரு படம் முழுவதும் விண்வெளியில் எடுக்கப்பட இருக்கிறது.
இந்த சாதனையை முதன் முறையாக ரஷ்ய நாடு கையில் எடுத்து இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தி சேலன்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் திடீரென்று உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட விண்வெளி வீரரை காப்பாற்ற ஒரு பெண் மருத்துவர் விண்வெளிக்கு சென்று காப்பாற்றுவது போல் கதைக்களம் கொண்ட இந்த கதையை ரஷ்யாவை சேர்ந்த குழு ஒன்று தயாரிக்கிறது.
ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மாஸின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அன்று கஜகஸ்தானில் உள்ள பைகனூர் காஸ்மோட்ரோமில் இருந்து நடிகை யூலியா பெரசில், இயக்குநர் கிளிம் ஷிபென்கோ, விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லராவ் ஆகியோர் சோயுஸ் எம்எஸ் -19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்று உள்ளார்கள். 12 நாட்கள் விண்வெளியில் தங்கி திரைப்படத்தின் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.
விண்வெளியில் படம் எடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதை ரஷ்ய நாடு எடுத்து முடித்தால் ரஷ்ய மிகப்பெரிய சாதனையை முதலில் செய்த நாடாகிவிடும்.