ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

0
261
#image_title

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் மீண்டும் அந்த 6 இளைஞர்கள் இந்திய அரசின் உதவி கேட்டு வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ பதிவில் பேசியுள்ள இளைஞர்கள், தங்களை உக்ரைனுக்கு எதிராக நடக்கும் போரில் ரஷிய அரசு ஏமாற்றி தங்களை ஈடுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். ‘சாடோவ், சபோரிஷியா ஒப்லாஸ்ட், உக்ரைன்’ என்னும் பகுதியில் இருந்து அந்த இளைஞர்கள் இந்த வீடியோ பதிவினை எடுத்து அனுப்பியுள்ளனர் என்று தெரிகிறது.

இந்நிலையில், அந்த வீடியோவில் பேசியுள்ள நபர், “பிரதமர் மோடி அவர்களுக்கு.. நாங்கள் இங்கு ரஷிய ராணுவத்திடம் சிக்கியுள்ளோம். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நல் உறவு இருப்பது எங்களுக்கு தெரியும். அதேபோல் நீங்கள் எங்களை இங்கிருந்து மீட்பீர்கள் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

‘வெளியேற உதவுங்கள்’ – உதவி கோரிய இந்தியர்கள்

மேலும் அவர், ‘மாஸ்கோவின் தூதரகம் மற்றும் ரஷிய அரசாங்கத்தை தொடர்பு கொண்டு நாங்கள் இங்கிருந்து விரைவில் வெளியேற உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இளைஞர்கள் ராணுவ உடைகள், குளிர்கால ஜாக்கெட்கள் உள்ளிட்டவைகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அரியானா, பஞ்சாப் மாநிலங்கள் மட்டுமின்றி வேறு சில இந்திய மாநிலங்களிலும் இருந்தும் செக்யூரிட்டி, கூலித்தொழிலாளி உள்ளிட்ட பணிகள் இருப்பதாக ஏஜெண்டுகள் மூலம் இளைஞர்கள் சிலர் ரஷியா வந்திருப்பதும், அவர்கள் தற்போது ராணுவத்தின் முன்களப்பகுதியில் சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்படி தற்போது ரஷியாவில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்க இந்திய தூதரகம் தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், உக்ரைனுக்கு எதிராக நடக்கும் போரில் இருந்து விலகி இருக்கும்படி அங்குள்ள இந்தியர்களிடம் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!
Next articleஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!