சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!!
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை(நவம்பர்16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். வரும் நவம்பர் 17ம் தேதி கார்த்திகை 1ம் தேதி பிறக்கின்றது. மேலும் சபரிமலை சீசன் அன்றைய தினம் முதல் தொடங்குகின்றது.
அன்றைய தினம் முதல் பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்பனை வழிபாடு நடத்துவதற்கு ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளனர். பக்தர்களில் சிலர் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்வதும் உண்டு. இதை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆண்டுதோறும் கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். அதற்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
நாளை(நவம்பர்16) முதல் ஜனவரி 16ம் தேதி வரை மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைக்கு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு மிதவை பேருந்து இயக்கப்படவுள்ளது. அதே போல குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை வசதி உள்ள பேருந்துகளும், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 30 தேதி வரை சபரிமலை கோயில் நடை பூட்டப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயங்காது. மேலும் சபரிமலைக்கு குழுவாக செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் வாடகை முறைப்படி பேருந்து வசதி செய்து தரப்படவுள்ளது.
சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் டி.என்.எஸ்.டி.சி செயலி மூலமாகவும் 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கூடுதல் விவரங்கள் பற்றி அறிய 9445014452, 9445014424, 9445014463, 9445014416 ஆகிய செல்போன் எங்களுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.