கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனங்கள், நடிகர்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மருத்துவ பொருட்களை, உபகரணங்கள், படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பி.சி.துரைசாமி கொரோனா பாதிப்பு சம்பந்தமான தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அனுப்பியுள்ளார்.
இதே சக்தி மசாலா நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் காசோலையை சக்திமசாலா நிறுவனத்தின் இயக்குனரான பி.சி.துரைசாமியும் அவரது மனைவியாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.