சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கழிவறைக்கு அருகில் உள்ள பாத்ரூமில் உடல்நலம் குன்றிய நிலையில் மூதாட்டி ராதா அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களாகவே தனது மகன் ஸ்ரீதர் சோறு, தண்ணீர் கொடுக்காமல் இங்கு அடைத்து வைத்திருப்பதாக அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூதாட்டியை மீட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பெற்ற தாயை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.