தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதிகாரப் பூர்வமாக கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, யார் நியமித்த நிர்வாகிகளை பின் தொடருவது என பல்வேறு குழப்பங்கள் கட்சியில் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் குழந்தையாக மாறி விட்டார். அவரை சுற்றியுள்ள 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையான அவர் நியமித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா என கிடுக்கி பிடி கேள்வியை எழுப்பியுள்ளார். ஏற்கனவே காலையில் பால் போடுபவர், இலந்தை பழம் விற்றவர்களை அழைத்து வந்து பதவி கொடுத்துள்ளனர் என்று பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்து ராமதாஸ் அவர்களை குழந்தை என பேசிய விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.