இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்குதல்… தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.
பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தற்போது வென்டிலேட்டரில் இருக்கிறார் ருஷ்டி. இந்த தாக்குதலுக்கு உலகமெங்கும் உள்ள எழுத்தாளர், படைப்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
75 வயதான ருஷ்டி, மேற்கு நியூயார்க்கின் சௌடோகுவா நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு கலை சுதந்திரம் குறித்து உரை நிகழ்த்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒரு நபர் மேடைக்கு விரைந்து அவர் மீது பாய்ந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பங்கேற்பாளர்கள் தரையில் விழுந்த ருஷ்டியை பிடிக்க உதவினார்கள். இந்த நிகழ்வில் பாதுகாப்பு வழங்கிய நியூயோர்க் மாநில பொலிஸ் படையினர் தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர். நியூஜெர்சியில் உள்ள ஃபேர்வியூவைச் சேர்ந்த 24 வயதுடைய ஹாடி மாதர் என்ற நபர்தான் தாக்குதல் நடத்தியவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர் நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டு வாங்கியவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பம்பாயில் ஒரு முஸ்லீம் காஷ்மீரி குடும்பத்தில் பிறந்த ருஷ்டி, ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்வதற்கு முன்பு, அவரது நான்காவது நாவலான ” சாத்தானின் வசனங்கள்” என்ற நாவலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதற்காக நீண்ட காலமாக மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டார். சில முஸ்லிம்கள் புத்தகத்தில் அவதூறான பகுதிகள் இருப்பதாகக் கூறினர். இந்த நாவல் 1988 இல் வெளியிடப்பட்ட பின்னர் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.