மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(56). இவர் வல்ல நாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிபுரிந்து வரும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அறிவாளால் சரமாரியாக கை, தலை, கழுத்து ஆகிய பகுதியில் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடித்துள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அருகிலிருந்தவர்கள் முறப்பநாடு காவல்துறையினருக்குத் தகவல்
தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மணல் கடத்தலைத் தடுத்த
காரணத்திற்காகக் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசுக்கு அரிவாள் விட்டு
விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் அறிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய இருவரில் ஒருவர் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மற்றொருவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டபகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு ஊழியரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.