விவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு
விளாத்திகுளத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதை தடுக்க கோரி வட்டாட்சியர்,காவல் துணை கண்காணிப்பாளர் இடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முறையீடு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் பெத்துராஜ் என்பவர் விவசாயத்திற்காக கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று கரம்பை மண்ணோடு குளக்கரையோரம் உள்ள சரள் மற்றும் வண்டல் மணலை டிராக்டர் மூலமாக இரவு பகல் பாராமல் மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க கோரியும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து வட்டாட்சியர் சசிகுமார் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் நாளை வருவாய்த் துறையினர் சார்பில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கூறப்படும் இடங்களில் அப்பகுதியில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.