தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு 

0
81

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு

தமிழகத்தில் 5.25 லட்சம் கோவில் நிலங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் போலி பத்திரம் மூலமாக முறைகேடு செய்துள்ளனர். மீதமுள்ள நிலங்கள் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என கிருஷ்ணகிரியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்களின் மீட்பு பிரச்சார பயணம் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்தது.

இதில் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் இஸ்லாமிய சொத்துக்கள் அவர்களிடம் உள்ளது. கிறிஸ்தவ சொத்துக்கள் அவர்களிடம் உள்ளது. ஆனால் இந்துக்கள் சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் உள்ளது.

இதனை மாற்றி தனி வாரியம் உருவாக்கி ஹிந்து ஆலயங்கள், நிலங்கள், இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். கல்வி இட ஒதுக்கீட்டில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. ஆனால் இந்துக்கள் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிபந்தனைகள் அதிக அளவில் உள்ளது.

தமிழகத்தில் 5.25 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு முறைகேடுகளாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலம் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இவற்றை முறையாக மீட்க வலியுறுத்தி வருகிறோம்‌. அதேபோல் அதிமுக திமுக ஆட்சியில் திருக்கோவில்கள் கும்பாபிஷேகம் செய்யாமல் சுமார் 50,000 கோவில்கள் உள்ளது. பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை பல கோவில்கள் திறக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் தமிழக அரசு கருத்தில் கொள்ளாமல் இந்துக்களுக்கு எதிரான அரசாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் அதிகரித்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கப்படும் நிலையில் நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி வசூல் செய்து விட்டு அரசு ஒதுக்கும் பணத்தை முறைகேடு செய்கின்றனர்.

அதேபோல் கோவில் வரும் வருவாய் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகைகளில் உருக்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.