அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம்

Photo of author

By Parthipan K

அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க? டகால்டி டீசரில் கலாய்க்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஒரு கலக்கு கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது தன்னுடைய புதிய அவதாரமான ஹீரோவாக ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் வழக்கம் போல கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் – யோகி பாபு இணைந்து நடித்துள்ள அவரின் அடுத்த படமான ‘டகால்டி’படத்தின் டீசரை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த விஜய் ஆனந்த் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர்.

காமெடி, காதல், ஆக்‌ஷன் என கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் மேற்கு வங்க நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராதாரவியும் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இன்று மாலை இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் யோகி பாபுவைப் பார்த்து நீ இவ்ளோ பெரிய நடிகரா வருவனு நினைச்சே பாக்கலடா என்று கலாய்க்கும் சந்தானம், அஜித் – விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று சொல்லும் நடிகை ரித்திகா சென்னிடம் அப்புறம் அட்லீ – சிவா எல்லாம் என்ன பண்ணுவாங்க எனவும் வழக்கம் போல கலாய்த்து பேசியுள்ளார்.

நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து காமெடியில் கலக்க இருக்கும் இந்தப் படம் இந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Santhanam | Ritika Sen | Yogi Babu | Vijay Anand