தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

Photo of author

By Sakthi

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!

Sakthi

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக களம் இறங்கினர்.

அதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகத்தீவிரமாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியது. அதேநேரம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நமக்கும் வாழ்க்கை என்ற நிலையில், அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக தீவிரமாக பணியாற்றியது.

இதற்கு நடுவில் சசிகலா திடீரென்று தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவருடைய ஆதரவாளர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு சசிகலா இருக்கிறாரா? இல்லையா? என்ற செய்தி கூட வெளியே வரவில்லை, அந்த அளவிற்கு அவர் மிகவும் அமைதியாக இருந்து வந்தார்.

அதோடு அவர் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று இடம்பெற்றிருப்பது அதிமுகவினரை கோபமுற செய்தது, இதனால் அவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்தநிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்திருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு தெரிவித்திருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் நியாயவிலை கடைகளுக்கு சென்று வாங்க தொடங்கினார்கள். ஆனால் பொருட்களின் தரத்தை பார்த்தபிறகு பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். புழுவுடன் இருக்கின்ற அரிசி, வெள்ளம், என்ற பெயரில் பிசின் போன்ற ஒரு பொருளை அடைத்து கொடுக்கப்பட்டத்தை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

இந்த பரிசு தொகுப்பு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதற்கு பதிலாக ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது. இதற்கு பதிலாக பண்டிகைக்கால கூடுதல் செலவுகளை சமாளிக்கும் விதத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.