புதிய வகை நோய் தொற்று பாதிப்பு யாரும் பதற்றப்பட வேண்டாம்! கூலாக பதில் சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்!

0
57

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி விடுதியில் 67 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதியிலேயே தனிமைப் படுத்தப் பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக, அந்த கல்லூரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்திருக்கிறது. இவர்களில் 66 பேருக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி இருக்கிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல தாம்பரத்தில் இருக்கின்ற சென்னை கிறிஸ்தவ கல்லூரி விடுதியில் தங்கி இருக்கின்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நோய்த்தொற்று பரிசோதனைகள் நேற்று முன்தினம் 12 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நேற்றைய தினம் மேலும் 7 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை குரோம்பேட்டை பகுதியில் இருக்கின்ற எம்ஐடி கல்லூரி விடுதி வளாகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர்கள் நலம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் பல்லாவரம் சட்டசபை உறுப்பினர் கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், உயர் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது, எம்ஐடி கல்லூரியின் 1659 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 81 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 40 மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டார்கள். மீதம் இருக்கின்ற 41 மாணவர்களுக்கு விடுதியிலேயே தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்த 41பேரில் 3 மாணவர்கள் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் .அதேபோல 41 மாணவர்களில் 39 பேர் இரண்டு தவணைத் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் நலமாக உள்ளார்கள், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து இவர்களுக்கு மறுபடியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நோய் தொற்று இல்லை என்று வந்துவிட்டால் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

நோய் பற்றிய உறுதியான 81 பேரில் 66 பேருக்கு புதிய வகை நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருக்கிறது. இன்னும் 262 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருக்கிறது. அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகளை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி தேர்வு விடுமுறைக்குப் பின்னர் நடத்தப்படும் எனவும், நோய் தொற்று அதிகமானால் தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதற்குப் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும் பெரிய அளவில் பதற்ற பட வேண்டியது இல்லை. புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே ஏழுநாட்கள் தனிமையை எடுத்துக்கொண்டால் போதும். எல்லோரும் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஏதாவது உடல்நிலை பாதிப்பு இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் எனவும், சென்னையில் 30 பகுதிகளுக்கு மேல் நோய் தொற்று சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும், அவர் தெரிவித்திருக்கிறார்.