திடீரென்று அரசியலிலிருந்து சசிகலா விலகல்! பின்னணி என்ன?
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகிய சசிகலா தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவ அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உணர்வு பூர்வமான நன்றிகள்.
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தனோ, அவர் மறைந்த பிறகும் அப்படியேதான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை.
புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியிடமும், இறைவனிடம் பிரார்த்திப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.