சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!

Photo of author

By Sakthi

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்திருக்கின்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகிய 3 பேருக்கும் தலா 4 வருட கால சிறை தண்டனையும், அதோடு 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதே வருடம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சசிகலா உட்பட மூவரும் பெங்களூரு சிறையில் சரணடைந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி சசிகலாவின் அவரது அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவரமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடை கிடையாது என்ற உத்தரவை கர்நாடக சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் சசிகலா தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகைகளை வழங்க இயலும் ஆகவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் சசிகலா எப்போது விடுதலை செய்யலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அந்த சமயம் பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கெடுத்து பார்த்தால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிகின்றது. இதற்கு இடையில் இரண்டு கட்டங்களாக 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்து இருக்கின்றார்.

அதுபோல இறுதித் தீர்ப்புக்கு முன்னர் சசிகலா சென்னை மற்றும் பெங்களூரு சிறையில் 35 நாட்கள் இரண்டு கட்டங்களாக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். சிறையில் இருந்த 35 நாட்களில் பரோலில் வெளியே சென்ற 17 நாட்களை கழித்துவிட்டால் 2021 ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படலாம் என்று மூன்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி கைதி சிறையிலிருந்த விடுமுறை நாட்களை கணக்கிட்டு அதிலிருந்து பரோலில் வெளியே சென்ற நாட்களை கழிப்பார்கள்.

அதன்படி பார்த்தால் கடந்த நான்கு வருடங்களில் சசிகலா 100க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களில் சிறையில் இருந்து இருக்கின்றார். அந்த தினங்களில் இருந்து பரோலில் சென்ற 17 நாட்களை கழித்துவிட்டால் ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு முன்பாகவே அவரை விடுதலை செய்ய வேண்டும். அதோடு சிறையில் சசிகலா தொலைதூர கல்வி மூலமாக கன்னடம் பயின்றிருக்கிறார். சிறையின் நன்னடத்தை விதிகளின் படி அதனை கணக்கிட்டால் ஒரு மாதம் வரை சலுகை அளிப்பதற்கு சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இருக்கின்றது.

சசிகலா சிறையில் இருந்த 35 நாட்கள், சிறையில் கழித்த சுமார் 100 விடுமுறை நாட்கள், கன்னடம் கற்றதற்கு 10 நாட்கள் என்று கணக்கு போட்டால், மொத்தம் அவர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு 145 நாட்களுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆகவே இது காலம் தாழ்ந்த முடிவு என்பதால் டிசம்பரில் அவரை விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதற்கிடையே சசிகலாவின் வழக்கறிஞர் நாளைய தினம் சசிகலா சென்னை சிறையில் இருந்ததற்கான ஆதாரங்களை பெங்களூரு சிறையில் தாக்கல் செய்ய இருக்கின்றார். அதன் அடிப்படையில் கர்நாடக சிறைத்துறை சசிகலாவின் விடுதலை தேதியை உறுதி செய்யும் என்று தெரிகின்றது.