தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது வழக்கின் அனைத்து சம்பவ இடங்கள், வழக்கில் தொடர்பான நபர்களையும் சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்ந வழக்கில் தொடர்பான காவலர் முத்துராஜ் திடீரென தலைமறைவு ஆனதால் சிபிசிஐடி அவரை தேடி வந்தது.
இந்நிலையில் விளாத்திக்குளம் பகுதியில் நேற்று இரவு முத்துராஜ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவலர் முத்துராஜை வரும் ஜூலை 17 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
