சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கர் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார்.
இந்நிலையில் சவுக்கு என்ற இணையதளம் மூலமாகவும், பல யுட்யூப் சேனல்களிலும் அவர் அரசியல் விமர்சனங்களையும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றியும் பேசி வந்தார். கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சியினரையும் அவர் விமர்சித்து வந்தார்.
நீதிமன்றங்களிலும் நீதித்துறையிலும் ஊழல் மலிந்துவிட்தாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் கடலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வகித்து வந்த அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க ஷோகாஸ் நோட்டீஸ் அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும், அதை பெறாததால் அவரின் சிறை அறையில் ஒட்டப்பட்டதால் அதை கிழுத்து எறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு மாத காலம் பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்து சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு பதிவிட்டு இருந்தார். சவுக்கு சங்கரைப் பார்க்க கடலூர் மத்திய சிறைக்கு சென்றதாகவும், காலையில் இருந்து காத்திருந்து அவரைப் பார்க்க முடியாமல் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது சவுக்கு சங்கர் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் கூறியுள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரும் சவுக்கு சங்கரின் நண்பருமான தடா ரஹிம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.