விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் திட்ட அமைப்பில் செயல்பட்டு வரும் 15 உயரதிகாரிகள் பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் அமுதா, ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் உள்ளிட்ட 15 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், 4 அறுவடை பயிர் பரிசோதகர்கள், 2 கணிப்பொறி செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கமிஷன் பெற்றுக்கொண்டே விவசாயிகள் அல்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் பெற்றுத்தந்தது விசாரணையின் மூலம் கள ஆய்வில் தெரியவந்தது. இதனடிப்படையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.