குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமதத்தில் கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அருகே அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். குளிதிகையை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்றார்.
மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றார். அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
மாணவியை அழைத்து சென்றது குறித்தும், மாணவியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விபத்து சம்பவம் எதுவும் நடைபெறாமல் தனது மகளை அழைத்து சென்றது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை தேடி விரைந்து சென்றனர்.
இந்த நிலையில் கானாற்று பகுதியில் மாணவி, வினோத்திடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். மாணவியின்அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர்.
பின்னர் வினோத்தை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது