தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த பொதுத்தேர்வில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96.99% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் ஈரோடு மாவட்டமும், 96.39% தேர்ச்சியில் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த தேர்வு எழுதிய பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பழையகோட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகள் ரேணுகா. இவர் ஓந்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதி மதிப்பெண்ணுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் அப்பள்ளியில் ஒட்டப்பட்டது. இதில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத ரேணுகா 196 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
இதனால் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தன்னை எரித்துக் கொண்டார். ரேணுகா வீட்டில் இருந்து புகை வெளியானதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மாணவி கருகிய நிலையில் இருந்துள்ளார். இதன்பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வையம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியுற்றதால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.