பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!!

பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!!

புதுக்கோட்டை அருகேயுள்ள பெருமாநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த பள்ளி ஐந்து வருடங்களுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதிலிருந்து 100% சதவீத தேர்ச்சியை எட்டி வருகிறது. மேலும் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம், கபடி, கராத்தே, யோகா போன்றவற்றிலும் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்திலும், மன ஆரோக்கியத்திலும் வல்லவர்களாக திகழ்கின்றனர்.

நீண்ட வருடங்களாக 84 மாணவர்கள் மட்டுமே இருந்த இந்த பள்ளியில் தற்போது 194 மாணவர்களை இணைத்து பெரிய மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தான் காரணம் என்று அப்பள்ளியில் பணி புரியும் சக ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர். இதைப்பற்றி தலைமை ஆசிரியர் மாரிமுத்து கூறியதாவது;

இந்த பள்ளிக்கு 5 வருடத்திற்கு முன்பு வந்தேன் அப்போதுதான் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவர் எண்ணிக்கை மிக குறைந்தளவு இருப்பதை மாற்றி அதிகரிக்கும் வேலைகளில் இறங்கினோம். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி சேர்க்காமல் நாங்கள் களத்தில் இறங்கி ஆசிரியர்களோடு மாணவர்களின் வீட்டுக்கே சென்று விடுவோம்.

பல்வேறு நல்ல திட்டங்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து சேர்க்கை நடத்துவோம். இதனால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல உடன் இருந்த பொறுப்பான ஆசிரியர்களே முக்கிய காரணம் என்று தலைமை ஆசிரியர் கூறினார். மேலும் நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகன், என்னைப் போல் பலர் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

மாணவர்களை மென்மேலும் மெருகேற்றவும், அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் எனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை செலவழித்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளித்து கவுரவுத்தேன். இதன் பிறகு பல்வேறு மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கடந்த வருடம் முதல் மதிப்பெண் எடுத்த இரண்டு மாணவர்களுக்கு பாராட்டி அரைபவுன் தங்க மோதிரம் அளித்தோம். எனக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருப்பதாக கூறி மகிழ்ந்தார்.

மாணவர்களிடையே வித்தியாசமான முயற்சியை கையாளும் தலைமை ஆசிரியருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Comment